தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்தே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. சற்றே கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பட்டன.
ஆனால் கொரோனா 2வது அலையின் பரவல் காரணமாக கடந்த மார்ச் 22ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் பாடம் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் கோரதாண்டவம் ஆடி வந்த கொரோனா 2வது அலை கடந்த சில நாட்களாக கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. எனவே மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது என பெற்றோர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும், மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்குவது குறித்தும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.