இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கேரியரில் பிசியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுனில் அனுஷ்கா சர்மா கர்ப்பமானார். இருவரும் இந்த செய்தியை ரகசியமாக வைத்திருந்த நிலையில், விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதையும், விரைவில் தான் தந்தை ஆக உள்ளதையும் அறிவித்தார்.
அந்த ட்விட்டர் பதிவு அதிகம் பேரால் கடந்த ஆண்டு லைக் செய்யப்பட்ட ட்வீட் என்ற சாதனையை கூட படைத்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனுஷ்கா சர்மா இன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அனுஷ்கா சர்மா, விராட் கோலி தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள விராட், இன்று நண்பகல் பெண் குழந்தை பிறந்துள்ளது. உங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி. அனுஷ்கா சர்மாவும், குழந்தையும் நலமாக உள்ளனர். எங்களது வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கிவிட்டோம். இந்த சமயத்தில் எங்களுடைய தனிப்பட்ட நேரத்திற்கு மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறோம் என பதிவிட்டிருந்தார்.

மகளின் புகைப்படத்தை வெளியிடும் படி விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இன்று லட்சோபம் லட்சம் மக்களின் ஆசையை விராட் கோலி நிறைவேற்றியுள்ளார். முதன் முறையாக தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள விராட் கோலி – அனுஷ்கா தம்பதி, குட்டி தேவதைக்கு வாமிகா என பெயர் வைத்துள்ளதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து வாமிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.