விஜய் டி.வி.யின் பிரபல காமெடி நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு” சீசன் 4 மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார் வடிவேல் பாலாஜி. பிரபல நடிகரைப் போல் நடிப்பதாக சொல்லிவிட்டு காமெடி செய்யும் நபர்கள் மத்தியில், வடிவேல் உடைய எல்லா மாடுலேஷனிலும் பட்டையைக் கிளப்பினார். அந்த சீசனில் அவர் வெற்றி பெறாவிட்டாலும், அச்சு அசலாக வடிவேல் போலவே அவர் நடித்தது ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.
அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “அது இது எது” நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு போர்ஷனில் பங்கேற்று கலகலக்க வைத்தார். அதன் பின்னர் கடைசியாக விஜய் தொலைக்காட்சி தொகுத்து வழங்கிய பல காமெடி நிகழ்ச்சிகள் வடிவேல் பாலாஜி இல்லாமல் ஒளிபரப்பானதே கிடையாது. காமெடி ஷோ என்றாலே வடிவேல் பாலாஜி எங்கே என ரசிகர்கள் தேடும் அளவிற்கு புகழ் பெற்றார்.
ஆரம்பத்தில் பிணவறையில் போஸ்ட் மார்ட்டம் செய்யும் வேலை பார்த்து வந்த பாலாஜி, ’கலக்கப்போவது யாரு’ சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு முழு நேரம் காமெடி ஷோக்களில் பங்கேற்க ஆரம்பித்தார். சின்னத்திரையில் கிடைத்த புகழை அடுத்து வெள்ளித்திரையிலும் “கோலமாவு கோகிலா” உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இப்படி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி சற்று நேரத்திற்கு முன்னதாக மரணமடைந்ததாக துக்க செய்தி வந்துள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் வடிவேல் பாலாஜியின் இரண்டு கைகளும் வாதம் ஏற்பட்டு செயலிழந்தன. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பணம் இல்லாத காரணத்தால் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த சில மணி நேரங்களிலேயே வடிவேல் பாலாஜி உயிர் பிரிந்தது.
லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதையும், வீட்டையும் சிரிப்பால் நிறைத்த காமெடி புயல் வடிவேல் பாலாஜியின் மறைவு சின்னத்திரை பிரபலங்களையும், ரசிகர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.