கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மூன்றாம்பட்டி கிராமத்தில் கடந்த 11ம் தேதி குடிதண்ணீர் பிரச்சனை குறித்து கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன் கூடி ஆலோசனை வந்துள்ளனர். அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.சி.தேவேந்திரன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த சிங்காரப்பேட்டை காவல்நிலை துணை ஆய்வாளர் கார்த்திகேயன், அவர்களை கலைத்து செல்லும் மிரட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த இளைஞர்களையும் அடிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் துணை காவல் ஆய்வாளர் கார்த்திகேயனை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அதே துணை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் திமுக ஒன்றிய பொருப்பாளர்களை ஒருமையிலும் தரகுறைவாகவும் பேசியுள்ளார். இந்த பிரச்சனையை மூத்த துணை காவல் ஆய்வாளர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததாக தெரிகிறது. அடுத்த நாள், ஊத்தங்கரை டி.எஸ்.பி. ராஜபாண்டியன் இரவு 12.30 மணிக்கு ஊருக்குள் புகுந்து திமுகவினரை கைது செய்ய திட்டமிட்ட அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து மிரட்டி உள்ளார். பெண்கள், கல்லூரி மாணவர்கள் என பார்க்காமல் அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததோடு, தாக்கவும் முற்பட்டுள்ளார்.
மேலும் துணை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தாக்கப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் சம்பந்தப்படாத இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளார். அதில் கேத்து நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (32) என்பவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அதில் படுகாயமடைந்த இளைஞர் மேற்கொண்டு அவர் செய்து வந்த ஓட்டுநர் பணிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்திய ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியன் மீது உரிய விசாரணை செய்து. நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்திற்கு அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கொலைவெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வெளியில் சொல்ல முடியாமல் மிகவும் மன உளைச்சலில் உள்ளனர். வெளியில் போய் சொன்னால் பொய் வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளார். இந்த மனித உரிமை மீறலுக்கு விசாரணை செய்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.