திருச்சியில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொமுச மாவட்ட தலைவர் மலர் மன்னன், விற்பனையாளர் சங்க மாவட்ட செயலர் மணி, ஏஐடியுசி சங்க மாநிலத்துணைத்தலைவர் (டாஸ்மாக்) ராயப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். பணியின் போது எங்களுக்கு முகமூடிகள், சானிடிசர்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டாலும், நாங்கள் தினமும் குறைந்தது 1,000 பேருக்கு மேல் வியாபரம் செய்து வருகிறோம். அரசாங்கம் சமூக இடைவெளியை கடைபிடிக்க அமல்படுத்தியிருந்தாலும், டாஸ்மாக் விற்பனை நிலையங்களுக்கு முன்னால் அதிக கூட்டம் கூடுகிறது.
அதில் கொரோனாத் தொற்றுடையவர்கள் இருக்கிறார்களா என்பதை ஊழியர்களாகிய எங்களால் அடையாளம் காண முடியாது. இதன் காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையம் அருகே தொடர் முழக்க போராட்டன் நடத்தினார்கள். முன்னதாக ஆக. 17 முதல் 21 வரை மாநில அளவில் கடை முன் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப் போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டுக் குழு அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.