ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(யுஏஇ) உள்ள அஜ்மான் உள்ள காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரம் போராடி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அஜ்மான் காவல்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுவைமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “சிவில் பாதுகாப்பு பிரிவுகள், 25 காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததையடுத்து அருகில் உள்ள கட்டிடங்களில் தீ பரவாமல் தடுக்கவும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவரவும் முடிந்தது” என்று கூறினார். காவல்துறையினர் அப்பகுதியில் இருந்தோரை அப்புறப்படுத்தினர், துபாய், ஷார்ஜா மற்றும் உம் அல் குவைன் ஆகிய இடங்களில் இருந்து வந்த சிவில் பாதுகாப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் அஜ்மான் படையுடன் இணைந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
நேற்று முன் தினம் லெபனானில் ஏற்பட்ட வெடி விபத்தில் நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இக்கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும் தீ சம்பவம் நிகழுந்துள்ளது.