கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அதன் தலைவராக இருந்த ராகுல்காந்தி தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகினார். பின்னர் சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் ஒன்றிணைந்து சோனியாகாந்திக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அதில் அசுர பலம் கொண்ட பாஜக அரசை எதிர்த்து அரசியல் செய்ய காங்கிரஸ் கட்சிக்கு சுறுசுறுப்பான நிரந்தர தலைவர் தேவை என்று தெரிவித்திருந்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்திய 23 பேரில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் போன்ற மூத்த தலைவர்களும் அடங்குவர். இதைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது மற்றும் பல முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.