கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு ரூ.69 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த தகவல்களை தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நிவாரண நிதி அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மே 17ம் தேதி வரை இணையதளம் வழியாக ரூ.29.44 கோடியும், நேரடியாக ரூ.39.56 கோடியும் என மொத்தம் ரூ.69 கோடி நன்கொடையாக வந்துள்ளது. கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட இந்த நன்கொடையில் இருந்து குறிப்பிட்ட தொகையை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக கொரோனா சிகிச்சைக்கு ரூ.69 கோடியில் இருந்து ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரெம்டெசிவிர், உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரெயிலில் கொண்டும் வரும் கண்டெய்னர்களை வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.