தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 5,892 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து உச்சம் தொடும் கொரோனா தொற்றால் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. நமது நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கூட மக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேரலாய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி தொடங்கப்பட்டது. அதேபோல் கேரளாவில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவும் மக்கள் கூட்டமின்றி எளிமையாக நடந்தது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகாக, கூட்டம் கூடுவதை தவிர்க்க திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேர்த் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி நடைபெற இருக்கும் ஆவணித் திருவிழா கொடியேற்றத்திற்கும் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.