கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள், மற்றும் பல்வேறு தொழில் முனைவோர்கள் என பலரும் வருவாய் இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஊரடங்கு காலத்தில் பெட்ரோல் டீசல் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில் ஊராடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதுசமயம் திருச்சி மாவட்டத்தில் அமைத்துள்ள சுங்கசாவடிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திருத்தியமைக்கப்பட்ட கட்டண விபரத்தை வெளியிட்டுள்ளது. அதில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ 5 – ரூ 15 வரை உயர்ந்துள்ளது. பேருந்து, சரக்கு வாகனங்களுக்கான கட்டணம், மாதாந்திர கட்டணத்தையும் உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்க காலத்தில் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த கட்டண உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) அதிகாரிகள் இது ஆண்டுதோறும் செய்யப்படும் வழக்கமான நடைமுறைதான். இதன்படி தற்போது கட்டணம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இதைதொடர்ந்து சுங்கச்சாவடிகளில் மறைமுக கட்டண வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதை கட்டுபடுத்த சுங்க வரி வசூலிப்பதை முறைபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.