கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதலே பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ள போதும், ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதை அரசு ஊக்குவித்து வருகிறது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் முறையில் கல்வி கற்று வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை செல்போன் மற்றும் இன்டர்நெட் போன்ற சிக்கல்கள் பெரும் சவாலாக உள்ளதால் மாணவர்கள் கல்வி கற்பதில் பெரும் சிரமமாக உள்ளது.
தற்போது தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேருந்து, ரயில் சேவை தொடக்கம், அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி உட்பட பெரும்பாலான விஷயங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆன்லைன் கல்வி முறையில் உள்ள சிக்கல்களை போக்கும் விதமாக பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது என்றும், கேரளாவில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் திறக்கப்பட்ட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஆசிரியர்கள் தின வாழ்த்து கூறிய அமைச்சர் செங்கோட்டையன், வேலை இல்லாமல் தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசு பள்ளிகளில் தற்காலிக பணி தரப்படும் என்றும் தெரிவித்தார்.