வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ரயில் மற்றும் பேருந்து சேவையை முற்றிலுமாக இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25ம் தேதி முதலே தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன.
தற்போது செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்திற்கு அனுமதி, வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க அனுமதி, இ-பாஸ் ரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.
இருப்பினும் மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து தற்போது மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து சேவைக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது