தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில் , கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தென்காசி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டை தனி மாவட்டமாக பிரித்து அறிவிக்க கோரி நீண்ட நாட்களாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தென்காசி மற்றும் செங்கல்பட்டை தனி மாவட்டமாக கடந்த ஆண்டு சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இதேபோல் கடந்த 27 ஆண்டுகளாக கும்பகோணத்தையும் தனி மாவட்டமாக அறிவிக்க கோரி நீண்ட நாள் கோரிக்கை வைத்து மக்கள், பல போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். அதைத்தொடர்ந்து வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வளைதலங்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் பரவிவருகிறது. இதுகுறித்து கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை க.அன்பழனிடம் கேட்ட போது, நடப்பு சட்டபேரவை கூட்டத் தொடரில் வருவாய்த்துறை மானிய கோரிக்கை வரும் 17ம் தேதி நடக்க இருக்கிறது. ஆனால் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கும் திட்டங்கள் ஏதும் இல்லை, மக்களின் கோரிக்கையின்படி கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.