கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாருக்கு கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாகவே கவலைக்கிடமான நிலையில் இருந்த அவருடைய உடல் நிலை இன்று மிகவும் மோசமானது. சரியாக மாலை 6.56 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், குடும்பத்தினர், தொகுதி மக்கள் என அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மறைந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்த குமார், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான குமரி அனந்தனின் தம்பி ஆவார். மேலும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்தகுமார் உயிரிழந்த செய்தி கேட்ட மறுகணமே தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது சித்தப்பாவின் மறைவு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சித்தப்பா !
நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது…
என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்…
அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது. ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்…
இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு, தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்…
சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது ,சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது…
வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பல பேருக்கு பணிகொடுத்த தருமம் கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது…
கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும்… கரை புரண்டு கண்ணீர் பெருகுகிறது…
ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்… என கதறி துடித்துள்ளார்.