பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி தனது பாந்த்ரா இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து காணப்பட்டார். ஜூலை 25 ஆம் தேதி சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே சிங் பிஹார் பாட்னா காவல் நிலையத்தில் நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டி புகார் ஒன்றை அளித்தார். பின்னர் சுஷாந்தின் தந்தை போலீஸ் டிஐஜி யுடன் பேசிய சிறிது நேரத்திலேயே, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பீஹார் மாநில அரசு இந்த வழக்கு விசாரனை சிபிஐ யிடம் ஒப்படைக்கப்படும் என்று பரிந்துரை செய்தது.
மத்திய அரசு, முதல்வர் நிதிஷ் குமாரின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தனது அரசாங்கத்தின் பரிந்துரையை விரைவாக ஒப்புதல் அளித்ததற்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிப்ரவரி மாதம் நடிகர் சுஷாந்த் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அப்புகாரை மும்பை காவல்துறையினர் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டதாவும், தாம் அளித்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மும்பை காவல்துறையினர் மீது சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.