கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த ஐந்து மாதங்களாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பள்ளி பொதுத்தேர்வுகள், கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து வருகின்றன. ஆனால் கல்லூரி, பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவித்தது. யுஜிசியால் கட்டாயமாக்கப்பட்ட இறுதியாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது, ‘கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக் கூடாது. கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம். ஆனால் கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும். தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கக் கூடாது. தேர்வு நடத்த இயலாது என முடிவு செய்தால் யுஜிசியை மாநில அரசுகள் அணுகலாம். யுஜிசியை அணுகி தேர்வு நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மாநில அரசுகள் கோரலாம். இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.