சமூக செயற்பாட்டாளரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் உச்சநீதிமன்ற செயல்பாட்டை விமர்சித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இந்த பதிவு குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 14-ஆம் தேதி பிரசாந்த் பூஷண் குற்றவாளி எனவும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் இந்த வழக்கு 20-ஆம் தேதி வந்தபோது பிரசாந்த் பூஷண் தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி அறிக்கை தாக்கல் செய்தார். பிறகு அவ்வழக்கில் அவருக்கான தண்டனை குறித்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு வந்த இந்த வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து, வருகின்ற செப்டம்பர் 15ம் தேதிக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று அருண் மிஸ்ரா தலைமையிலான நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது குறித்து பிரசாந்த் பூஷண் கூறுகையில், தனக்கு விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராத தொகையை தன் சார்பாக வழக்கறிஞர் ராஜீவ் தவான் செலுத்திவிட்டதாக கூறியுள்ளார்.