கொரோனா பொது முடக்கத்தினால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவையில் மாணவி ஒருவர் நீட் தேர்வின் பயம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ 12 ஆம் வகுப்பை சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படித்து முடித்தவர்.
மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். சென்ற வருடம் நீட் தேர்வில் கலந்துக் கொண்டு 451 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த அவருக்கு பல் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது. பொது மருத்துவம் படிப்பதை தன் லட்சியமாகக் கொண்ட சுபஸ்ரீ தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து மேலும் பயிற்சிப் பெற்று வந்துள்ளார். கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வை வரும் செப்டம்பர் மாதம் நடத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பிற்கு பிறகிலிருந்து மாணவி சுபஸ்ரீ இந்த வருடமும் பொது மருத்துவத்தில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்ற குழப்பத்தின் காரணமாகவும், நீட் தேர்வின் பயத்தின் காரணமாகவும் மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சுபஸ்ரீயின் தாயார் சுமதி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி போஸ்ட்மார்டம் செய்வதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.