தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் காற்று நீர் மண் மாசுபாடு அடைவதாக தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு முடிவை வெளியிட்டது. இதையடுத்து 2013ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தனர். 2018ம் ஆண்டு பேரணியாக சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. வேறு வழியில்லாமல் தமிழக அரசு கடந்த 2018 மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குப் போட்டது. இவ்வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. வேதாந்தா நிறுவனமும் உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றமோ சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பவானி சுப்பராயன், சிவஞானம் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. கடந்த ஜனவரி மாதம் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், தமிழக அரசை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட போராட்டம், 13 உயிர்களின் தியாகம் என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வந்த தூத்துக்குடி மக்கள் இந்த தீர்ப்பால் உற்சாகமடைந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தூத்துக்குடியில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடி வருகின்றனர்.