40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ஒட்டுமொத்த இசை ரசிகர்களின் மனதிலும் ராஜாவாக வலம் வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் சாதாரண அறிகுறிகள் மட்டுமே தென்பட்ட போதும் எஸ்.பி.பி. உடனடியாக சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் சென்டரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 14ம் தேதி முதலே உடல் நிலை கவலைக்கிடமானதாக மாறியது.
இதனால் கடந்த 20ம் தேதி எஸ்.பி.பி. பூரண நலம் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினர். திரையுலகினர், இசைப்பிரியர்கள், சாமானியர்கள் என லட்சக்கணக்கானோரின் தூய பிரார்த்தனையின் பலனாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தினமும் தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதன் படி இன்று அவருடைய உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தற்போது விழிப்புடன் இருக்கும் அவர் நாங்கள் சொல்வதை புரிந்து கொள்கிறார். எங்களுடைய மருந்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளது.