பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த எஸ்.பி.பி, தனக்கு லேசனா அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், வீட்டில் இருந்தே சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் தன்னை குடும்பத்தினர் தனிமையில் இருக்க விடமாட்டார்கள் என்பதால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு முழு ஓய்வு தேவை என்பதால் யாரும் போன் செய்ய வேண்டாம், நான் நலமுடன் இருக்கிறேன் என உறுதி செய்தார்.
இந்நிலையில் நேற்று வரை எஸ்.பி.பி நல்ல உடல் நலத்துடன் இருந்து வந்தார். இன்று மாலை எம்.ஜி.எம். மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5ம் தேதி முதல் கொரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவரின் உடல்நலம் திடீர் என மோசமடைந்தது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி எஸ்.பி.பி. ஐசியூவிற்கு மாற்றப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது” என அதிர்ச்சி கொடுத்தது.
இசையுலகின் ஜாம்பவானான எஸ்.பி.பி நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென ஏ.ஆர். ரகுமான், சித்ரா, ஹாரிஸ் ஜெயராஜ், தனுஷ், அனிருத் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். சற்று நேரத்திற்கு முன்பு இசைஞானி இளையராஜா தனது நண்பர் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் நலமுடன் திரும்பி வர வேண்டும் என உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பாலு உனக்காக காத்திருக்கிறேன்… சீக்கிரமாக எழுந்து வா… என உருக்கமாக பேசியிருந்த அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதே சமயத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறந்துவிட்டதாக சில விஷமிகள் சோசியல் மீடியாவில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், அப்பா வெண்டிலேஷனில் உள்ளார், அவர் உடல் நிலை சீராக உள்ளது. தயவு செய்து வதந்திகாளை பரப்ப வேண்டாம். அவருடைய உடல் நிலை குறித்த தகவல்களை நாங்களே வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.