கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் விரைவில் அமைக்கப்படும் அதற்காக அனுமதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆயுஷ் மருத்துவர்களை கொண்டு சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் இதுவரை 18 சித்த மருத்துவ சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்த மருத்துவ மையம் 100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 154 படுக்கை வசதியுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சேலம் அருகே உள்ள உத்தம சோழபுரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சேலம் அருகே அமைந்துள்ள உத்தமசோழபுரம் வேளான் விற்பனை மாநில பயிற்சி வளாகத்தில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அறிகுறி, பாதிப்பு மற்றும் குறைவான பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, இங்கு 60 படுக்கையறை வசதிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
மூலிகை ஆவி பிடித்தல், மூலிகை புகை பிடித்தல், மூலிகை கசாயம் போன்ற சித்தவைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்படுவது மக்களிடையே நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.