கொரோனா (covid 19) நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள காலவரையின்றி் மூடப்பட்டுள்ளன. எப்போது திறக்கப்படும் என்று யாருக்கும் தெரியவில்லை. தமிழகம் உட்பட பல மாநில அரசுகள் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சியை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் NEETமற்றும் JEE தேர்வுகளை செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது. கோவையில் ஒரு மாணவி இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு NEET மற்றும் JEE தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு எந்த கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் NEET மற்றும் JEE தேர்வை நடத்துவதில் உறுதியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சோனியாகாந்தி தலைமையில் பிஜேபி ஆளாத மாநில முதல்வர்களின் காணொளி கூட்டம் நடைபெற்றது. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப், ஜார்கண்ட் மாநில முதல்வர்களும் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு நடத்தவிருக்கும் NEET மற்றும் JEE தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர 7 மாநில முதலமைச்சர்களும் முடிவு செய்துள்ளனர்.