தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்களை குறைக்கும் நோக்கத்தில் அரசானது சாலைகளை விரிவுபடுத்தி வருகிறது. அதோடு மட்டுமின்றி 8 வழிச்சாலை போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் மத்திய பகுதியாக இருக்கும் திருச்சி மாநகரில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு முதன் முறையாக ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அவை என்னெவென்றால் திருச்சி தலைமைத் தபால் நிலையம் முதல் நீதிமன்றம் வரையிலான சாலையில் இடதுபுறமாக இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் மஞ்சள்-வெள்ளை நிற கோடுகள் வரையப்பட்டு அதில் இரு சக்கர வாகனங்களை பயணிக்குமாறு போக்குவரத்து காவலர்களால் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அந்த டிராக் வழியாக தற்போது சென்றுவருகின்றன.
இத்திட்டதை கடந்த ஆகஸ்ட் 7 ம் தேதியன்று மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் தெரிவித்திருந்தார். அந்த வகையில் திருச்சி மாநகரில் 3, 4 சாலைகளில் இது முதலில் அமைக்கும் பணி நடைபெறுவதாக அவர் தெரிவித்திருந்தார். தற்போது அவை செயல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வாகன ஓட்டிகள் வாகனத்திற்காக போடப்பட்ட கோட்டு பகுதியில் செல்லாமல் சாலையின் மற்ற பகுதிகளிலும் செல்வதால் இதற்கு போதிய விழிப்புணர்வை மாநகராட்சி நிர்வாகமும், மாநகர காவல்துறையினரும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மேலும் இந்த புதிய திட்டம் எதிர்பார்த்தவாறு விபத்துக்களை குறைக்க உதவுமேயானால் தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தப்படும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.