மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை (EIA 2020) கொஞ்சமேனும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் டெல்லி உயர்நீதிமன்றம் தான். மத்திய அரசு அவசரகதியில் கொண்டு வந்த இந்த சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அதனால் அனைத்து மாநில மொழிகளிலும் இந்த வரைவை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்புதான் மத்திய அரசு குறைந்த பட்சம் ஹிந்தியிலும் இந்த சுற்றுச்சூழல் அறிவிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது. சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிடாத மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு தடை கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசின் அறிவிப்புகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டால் போதும் என அரசு அலுவல் மொழிச் சட்டம் கூறுவதாக” எடுத்துரைத்தார். குறுக்கிட்ட நீதிபதிகள் மகாராஷ்டிராவின் உள் பகுதியில் உள்ள கிராம மக்கள், வடகிழக்கு மாநில மக்கள், கர்நாடக மக்கள் இதை எப்படி புரிந்து கொள்வார்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் மொழி மாற்றத்திற்கான மென்பொருள்கள் எளிதாக கிடைக்கும் போது அரசு அறிவிப்புகளை அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதில் அரசுக்கு என்ன சிரமம்? என்றும் கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளையும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் வெளியிடும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டுவர வேண்டும். என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பின்னர் மத்திய அரசுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த நீதிமன்ற அவமதிப்பு நோட்டீசுக்கு இடைக்காலத் தடையும் விதித்து உத்தரவிட்டனர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான் அமர்வு நீதிபதிகள்.