நெல்லை காவல் சரகத்தில் ஆய்வாளராகப் பணி புரிபவர் மகேஸ்வரி. இவரது தலைமையில் சுதந்திர தின அணிவகுப்புக்கு கடந்த ஒரு வார காலமாக ஒத்திகை பார்க்கப்பட்டு வந்தது. அணிவகுப்புக்கு தலைமை தாங்கி நடத்தி வரும் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.நேற்றிரவு எதிர்பாராதவிதமாக அவரது தந்தை திண்டுக்கல்லில் காலமானார். செய்தி அறிந்து துடித்துப் போனார் மகேஸ்வரி.
தனது பணியை வேறு யாரிடமும் ஒப்படைக்க முடியாத நிலை. சுதந்திர தின அணிவகுப்பை தலைமை தாங்கி நடத்தியே ஆக வேண்டிய கட்டாய சூழல். கடமையா? பாசமா? என்ற போராட்டத்தில் தனது பாசத்தை பின்னுக்குத் தள்ளி கடமைக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் சிங்கப் பெண் மகேஸ்வரி.நெல்லை பாளையங்கோட்டை வ. உ. சி மைதானத்தில் இன்று சுதந்திர தின விழா நிகழ்ச்சி கலெக்டர் ஷில்பா பிரபாகர் தலைமையில் நடந்தது. தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டிருந்தவர், அணிக்கு தலைமை தாங்கி நடத்தி தனக்கு சல்யூட் வைத்த மகேஸ்வரியை பார்த்ததும் அதிர்ந்து விட்டார்.
கலெக்டர் முதல் அதிகாரிகள் அனைவரும் திகைத்து விட்டனர். மகேஸ்வரியின் கண்கள் பணித்தது. விழா முடிந்ததும் அனுமதி பெற்று இறந்து போன தன் தந்தையைக் காண அங்கிருந்து சென்றார். மகேஸ்வரியின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. மகேஸ்வரியின் கடமை உணர்ச்சியை எண்ணி அனைவரும் பெருமிதம் கொண்டனர்.