சேலம் மாவட்ட மேட்டூர் அருகேயுள்ள ஜலகண்டாபுரத்தில் தடையை மீறி நடைபெற்ற கறி விருந்தால், பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் 20 வயது பெண் உட்பட 3 பேர் அடுத்தடுத்து உயிர் இழக்க பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து கறி விருந்தில் பங்கேற்றவர்கள் மூலமாக கொரோனா தொற்று பரவுவதாக ஊர் முழுவதும் தகவல் பரவியது. இதையடுத்து சுகாதாரத்துறை பணியாளர்கள் கறி விருந்தில் பங்கேற்றவர்கள் உட்பட 152 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
ஒரே ஊரில் 100க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இந்நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட 152 பேரில் முதற்கட்டமாக 46 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு நேற்று முதல் ஆகஸ்ட் 27ம் தேதி வரை ஒருவாரத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா தொற்றால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படலாம் எனக்கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பரிசோதனை மேற்கொண்டவர்களில் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் கிட்டதட்ட 20 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக அச்சத்தில் மூழ்கி இருக்கும் ஜலகை மக்களை இந்த செய்தி மேலும் பீதியடைய வைத்துள்ளது. இருப்பினும் அரசு அப்பகுதியில் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.