சேலம் மாவட்டம் மேட்டூரில் சந்தியா என்பவர் நங்கவள்ளி ஒன்றியம் ஆவடத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவருடைய கணவர் செல்வம், அதிமுக நங்கவள்ளி தெற்கு ஒன்றிய செயலாளராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் ஆவடத்தூர் கிராமத்திலுள்ள தமுக்கம் மைதானம் பகுதியில் 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை என அப்பகுதி மக்கள் 10வது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த செல்வி என்பவரது கணவர் ராஜேஸ்வரனிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குடிநீர் பிரச்சனை தொடர்பாக நேற்று முன்தினம் ஒன்றிய செயலாளர் செல்வத்திற்கு, கவுன்சிலர் செல்வியின் கணவர் ராஜேஸ்வரன் போன் பேசியுள்ளார். இருவரது உரையாடலும் சண்டையாக மாற, ஒருவரை ஒருவர் சரமாரியாக திட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த ஆடியோ பதிவு சோசியல் மீடியாவில் வைரலானது.
இதுகுறித்து நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ராஜேஷ்குமார் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் தன்னையும் திமுக மாவட்ட பொறுப்பாளர்களையும் தவறாக பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார். ஜலகண்டாபுரம் காவல்நிலைய எஸ்.ஐ பழனிசாமி புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.