சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிரமடையும் கொரோனா பரவல் கடந்த வாரம் ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50க்கும் மேற்கொண்டோருக்கு உறுதி செய்யப்பட்டது. ஜலகண்டாபுரத்தில் கறி விருந்து அளித்த குடும்பத்திலிருந்து ஒருவர் உட்பட அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகள் கொரோனாவால் நிகழ்ந்தனவா என்ற பீதி அந்த ஊர் முழுவதும் பரவியது. இதையடுத்து அந்த விருந்தில் கலந்துக் கொண்ட சுமார் 150 நபர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முதற்கட்டமாக 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து கடந்த 21ம் தேதி முதல் வரும் 27ம் தேதி வரை ஜலகண்டாபுரம் பேரூராட்சிட்குட்பட்ட பகுதிகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களில் இரண்டாம் கட்டமாக வெளிவந்த முடிவுகளின் படி இதுவரை 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிலர் மேட்டூர் அரசு மருத்துவமனையிலும், சிலர் சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜலகண்டாபுரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண்மணி கொரோனா தொற்றால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்மணிக்கு கடந்த 22ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார். ஜலகையில் ஏற்கனவே முதியவர், மூதாட்டி, இளம் பெண் என 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர், அவர்கள் கொரோனா தொற்றால் தான் மரணமடைந்தனரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வரும் நிலையில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தொற்றால் உயிரிழந்திருப்பது அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.