நாளை (ஆகஸ்ட் 10) முதல் தங்களது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப் போவதாக தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. இதுவரை அவர்களது கோரிக்கை சம்பந்தமாக அரசு தரப்பு எந்தவிதமான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கவில்லை. இதனால் அரசு நியாய விலைக்கடை பணியாளர்களின் காலவரையற்ற போராட்டம் நாளை முதல் திட்டமிட்டபடி நடக்கும் எனத் தெரியவருகிறது.
இந்நிலையில் அனைத்து மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் “போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறும், பொது விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு பொது மக்களுக்கு நியாய விலை கடையில் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் மேற்கொண்டு நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வேலைக்கு வராத நாட்களுக்கான சம்பள பிடித்தம் செய்யப்பட வேண்டும்” எனவும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.