பாலிவுட் திரையுலகில் புகழ் பெற்ற ரிஷி கபூர் புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானர். 2018ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பிய நிலையில், ஏப்ரல் மாதம் 30ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அவருடைய இளைய சகோதரரும், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமைகொண்டவருமான ராஜீவ் கபூர் இன்று காலமானார்.
ராஜீவ் கபூர் நடிப்பில் 1985ம் ஆண்டு வெளியான ‘ராம் தேரி கங்கா மெய்லி’ 1983ம் ஆண்டு வெளியான ‘ஏக் ஜான் ஹைன் ஹம்’ஆகிய திரைப்படங்கள் மூலமாக பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்தவர். ஹென்னா, ஆ ஆப் லாட் சலேன் ஆகிய படங்களை தயாரித்துள்ள ராஜீவ் கபூர், அண்ணன் ரிஷி கபூரை வைத்து பிரேம் கிராந்த் என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
58 வயதே ஆன ராஜீவ் கபூருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் வசிக்கும் மும்பை செம்பூர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு வரும் முன்பே அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.