சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவருடைய உறவினர்கள் ஒன்று சேர்ந்து அதே ஊரைச் சேர்ந்த செந்தில் என்பவரையும் அவருடைய மனைவி பிரியதர்ஷினியையும் தாக்கியுள்ளனர். இது குறித்து பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் செந்தில் புகார் செய்துள்ளார். பல நாட்கள் ஆகியும் காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் பூலாங்குறிச்சி காவல் நிலையம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மக்களோடு மக்களாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.செல்வம் கலந்து கொண்டார். ஓய்வு பெற்ற நீதிபதியே காவல்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட செய்தி மீடியாக்களில் வைரல் ஆனது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீதிபதியிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். காவல் நிலைய ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இவ் வழக்கினை விசாரணைக்கு எடுத்துள்ளது.