Newskadai.com
தேர்டு ஐ

‘கேங்ஸ்டர்’ விகாஷ் துபே என்கவுண்டர்… மறைந்திருக்கும் மர்மம் என்ன?

Share this:

நம் நாட்டில் ஒவ்வொரு நகரிலும், சில ரவுடிகள் பல ஆண்டுகளாக கோலோச்சுவதும், திடீரென ஒரு நாள் அவர்கள் போலிசாரால் என்கவுண்ட்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர்கதை. இதில் லேட்டஸ்ட் வரவு விகாஷ் துபே…

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பீகாரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் விகாஷ் துபே. மனைவி, இரண்டு குழந்தைகள் என அளவான குடும்பம். 1990-களிலிருந்து என்கவுண்ட்டர் செய்யப்பட்ட நாள் வரை கான்பூர் மாவட்டத்தின் கன்ட்ரோல் அவன் கைகளில். உ.பி.யில் உள்ள அனைத்து கட்சியிலும் அவனுக்கு செல்வாக்கு இருந்த காரணத்தால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், விகாஷ் துபேயுடைய சாம்ராஜ்யத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.கடந்த முப்பது ஆண்டுகளாக கான்பூரின் அசைக்க முடியாத தாதாவாக வலம் வந்தவன் துபே.

2001 ஆம் ஆண்டு சந்தோஷ் சுக்லா என்ற பிஜேபி தலைவரை காவல் நிலையத்திலேயே வைத்து சுட்டுக் கொன்றான். விகாஷ் துபேக்கு எதிராக எந்த காவலரும் சாட்சி சொல்லாததால் அந்த வழக்கில் இருந்து கோர்ட் அவனை விடுதலை செய்தது. விகாஷ் துபேயின் செல்வாக்கிற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். பல கொலை, கொள்ளை வழக்குகளில் இன்றும் தேடப்பட்டு வரும் நபர். கான்பூரில் உள்ள சௌப்யூர் காவல் நிலையத்தில் மட்டும் அறுபது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றால் மீதி விஷயங்களை நாமே யூகித்துக் கொள்ளலாம்.

உ.பி.யின் கான்பூரில் கோலோச்சி வந்த விகாஷ் துபேயைப் பற்றி நாடே அறிந்தது 2020 ஜூலை 3-ஆம் தேதி அன்றுதான். பல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய விகாஷ் துபேயை ஜூலை 3-ஆம் தேதி கான்பூர் போலிசார், கான்பூருக்கு அருகில் உள்ள திக்ருக் என்ற கிராமத்தில் சுற்றி வளைத்தனர். சினிமா பட பாணியில் போலீசாருக்கும், விகாஷ் துபேயின் ஆட்களுக்கும் துப்பாக்கிச் சூடு நடந்தது. ரவுடிகளின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு எட்டு போலீசார் மற்றும் ஒரு காவல் கண்காணிப்பாளர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உ.பி.யிலிருந்து தப்பித்த விகாஷ் துபே மத்தியப்பிரதேசத்தில் தஞ்சம் அடைகிறான். 2020 ஜூலை 9ஆம் தேதி அன்று மத்திய பிரதேச போலிசார் அவனை கைது செய்து உ.பி. சிறப்பு காவல் படையினரிடம் ஒப்படைக்கின்றனர். ரவுடிவிகாஷ் துபேயை உத்திரபிரதேச சிறப்பு காவல் படையினர் கான்பூருக்கு அழைத்து வரும் வழியில் போலிசாரால் என்கவுன்ட்டர் செய்யப்படுகிறான்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்கு காவல்துறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சாலை மார்க்கமாக விகாஷ் துபேயை அழைத்து வந்த வாகனம் நிலை தடுமாறி கவிழ, சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட துபே தப்பி ஓட முயன்றான். ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு போசாரை நோக்கிச் சுட, போலீசார் திருப்பிச் சுட்டதில் விகாஷ் துபே இறந்துவிட்டான்” என்று தெரிவிக்கிறார். எது எப்படியோ, நாட்டிற்கு மிக அச்சுறுத்தலாக இருந்த ஒரு கேங்க்ஸ்டரின் கதை முடிந்தது.

முடிவுக்கு வந்தது அவன் வாழ்க்கை மட்டுமல்ல, அவன் மீது நிலுவையில் இருந்த அத்தனை வழக்குகளும் தான். இத்தனை ஆண்டுகளாக திரை மறைவில் அவனுக்கு உதவிய அதிகார வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் எந்தவித சுவடுகளுமின்றி தப்பித்துக் கொண்டனர்… எந்தவித இழப்புமின்றி தப்பித்துக் கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். என்கவுண்டரின் மிகப் பெரிய நன்மையே இது தானே.! இந்த என்கவுண்டர் பற்றி சலசலப்பு எழ, உ.பி முதல்வர், ஓய்வுப்பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரனை ஆணையத்தை அமைத்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே, விகாஷ் துபே போன்றவர்கள் வெளியே நடமாடியது நீதித்துறையின் தோல்வியாகும். உ.பி அரசு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

கோடி கோடியாக சம்பாதித்த விகாஷ் துபே ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்வே வாழ்ந்து வந்தான் என்றும், அவன் ஒரு டீடோட்லர் என்றும், அவனுடைய வங்கிக் கணக்குகளில் சொல்லிக் கொள்ளும்படியான சேமிப்புகள் எதுவும் இல்லை என்றும் கிடைக்கும் தகவல்கள் வேறு ஒரு நபரை ஞாபகப்படுத்துகிறது. அந்த நபர் சந்தன கடத்தல் வீரப்பன்.

தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசுகளுக்கு இருபது முப்பது ஆண்டுகளாக சிம்ம சொப்பனமாக விளங்கியவன். பல்லாயிரம் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியவன். இறுதியில் விகாஷ் துபே போலவே எந்தவித விசாரனையுமின்றி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். வாழ்ந்த காலத்தில் காடு காடாக சுற்றித் திரிந்தவன் சொத்துப்பத்து எதனையும் சேர்த்து வைக்கவில்லை. அப்படியானால் சந்தன மரங்களை வெட்டிக் கோடி கோடியாக சம்பாதித்த பணம் எங்கே போனது..? வீரப்பன், விகாஷ் துபே போன்றவர்களை உருவாக்குவது யார்..?

அவர்களால் ஆதாயமடைந்தவர்கள் யார்…? அவர்களைப் பாதுக்காத்தவர்கள் யார்…? ஏன் என்கவுண்ட்டர் போர்வையில் கொலை செய்யப்படுகிறார்கள்…? இந்த கேள்விகள் புதிதல்ல… என் கவுண்ட்டர் கொலைப் போலவே இந்த கேள்விகளும் தொடர்கின்றன…. பதிலில்லாமல்….


Share this:

Related posts

என்னதான் ஆச்சு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு? தொடர் தோல்வி…!!

MANIMARAN M

“காதலித்து பார்”… ஆண் – பெண் நேசத்தை ஆதரிக்க பெற்றோரை தடுப்பது எது?

NEWSKADAI

அழிவின் விளிம்பில் யானை எனும் பேருயிரி… பாதுகாக்க மறந்த மனித இனம்…!!

MANIMARAN M

மாணவர்களின் கல்வியில் கல்லைத் தூக்கிப் போட்ட மத்திய அரசு… புதிய கல்விக் கொள்கை 2020…!!

POONKUZHALI

மற்றொரு போபால் பேரழிவுக்கு திட்டமிடுகிறதா மத்திய அரசு?… கந்த சஷ்டி மடை மாற்றம் இதுக்குத் தானா?

NEWSKADAI

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

MANIMARAN M