கோவை மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நேற்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வந்தது.கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்கள், நேற்று மாலை 5 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 5 மணி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கோவை மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க பொதுமக்களும் சிறு வியாபாரிகளும் நகரில் கூடியதால் நேற்றைய தினம் கோவையில் வழக்கத்தைவிட அதிகமான மக்கள் கூட்டம் காணப்பட்டது. மாலை 5 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால் நகரை விட்டு வெளியேறும் மக்கள் கூட்டத்தால் கோவை உக்கடம் பகுதி மக்களால் நிரம்பி வழிந்தது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கே, கொரோனா பரவலுக்கு காரணம் ஆகிவிடும் போல் தெரிகிறது. பேசாமல் இரவு ஏழு மணி முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்தி இருந்தால் இந்த நெரிசல் ஏற்பட்டிருக்காது “என்று போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் புலம்பித் தவித்தனர்.