இடி மின்னல் மழை மூன்றும் பிரிக்க முடியாத சக்திகள். பூமி பந்திற்கு தேவையான அடிப்படை ஆதார சுருதிகள். மின்னலில் மின்சாரம் இருக்கிறது. ஒரு மின்னலில் உள்ள மின்சாரத்தை சேமிக்கும் தொழில்நுட்பம் நமக்கு இருந்தால் அது ஒரு நகரத்தின் ஒரு மாத மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இருக்கும். இப்படி சக்தி வாய்ந்த மின்னல் சில நேரங்களில் உயிர் சேதங்களை ஏற்படுத்துகிறது.
உலகம் முழுவதும் மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம், நம் நாட்டில் கூட ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்கி சில ஆயிரம் பேர் பலியாகின்றனர். மின்னல் தாக்கும் இடத்தை முன்கூட்டியே நம்மால் கணிக்க முடிந்தால் பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்படும். இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இந்திய புவியியல் ஆய்வு மையம் தற்பொழுது மின்னலை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.
புனேவில் உள்ள இந்திய புவியியல் ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி சுனில் பவார் இதுகுறித்து “மின்னலை கண்டறியும் சென்சார்களை நாடு முழுவதும் 83 இடங்களில் நிறுவி உள்ளோம். இந்த சென்சார்கள் மூலம் மின்னல் பாதிப்பை ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அறிய முடியும்.
செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் மின்னல் பயணிக்கும் பாதையை மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே துல்லியமாக கணக்கிட முடியும். இதனால் பாதிக்கப்பட போகும் பகுதியில் உள்ள மக்களை உடனடியாக எச்சரிக்கை செய்து காப்பாற்ற முடியும்” என்று கூறியுள்ளார். அடுத்தாண்டு முதல் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இனி மின்னலால் மரணம் என்பது கனவில் மட்டுமே இருக்கும்.