சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரை நிர்வாணமாக வந்து ஆன்லைன் கிளாஸ் எடுப்பது, மாணவிகளுக்கு ஆபாச மெசெஜ் அனுப்புவது என எல்லை மீறியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரை ஸ்கீரின் ஷாட்டுடன் சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவி சோசியல் மீடியாவில் பதிவிட சர்ச்சை விஸ்வரூபம் எடுத்து. அதில் நள்ளிரவில் மாணவிகளுக்கு வீடியோ கால் செய்து தொல்லை கொடுப்பது, சினிமாவிற்கு அழைப்பது, ஆபாச பட லிங்குகளை மாணவ, மாணவிகள் உள்ள பள்ளி குரூப்பில் பகிர்வது என பகீர் குற்றச்சாட்டுக்கள் வெளியானது.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் பலனில்லை என்று கூறப்பட்ட நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதில் மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் வெளியாகியுள்ளது. மாணவிகளிடம் வரம்பு மீறி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்கும் கமிட்டியில் ஒருவர் என்பது தான் அது.
பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குழுவின் தலைவர்தான் இந்த ராஜகோபாலன். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்களில் இது போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கு ஒரு தலைவரை நியமிப்பர். யாருக்காவது பாலியல் தொல்லை இருந்தால் அவர்கள் நேரடியாக இந்த தலைவரிடம் புகார் கொடுக்கலாம். இதுபற்றி தகவல் தெரிந்தவர்களோ பாலுக்கு யாராவது பூனையை காவல் வைப்பார்களா? என தலையில் அடித்துக் கொள்கின்றனர்.