வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் மீண்டும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரி பாயும் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். மேலும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளான திருநகரி, வெள்ளபள்ளம், உச்சிமேடு ஆகிய இடங்களில் கெயில் நிறுவனம் மீண்டும் எரிவாயு குழாய்களை அவசர அவசரமாக பதித்து வருகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கெயில் நிறுவனம் வேட்டங்குடி, எடமணல், திருநகரி வழியாக 32 கிலோமீட்டர் தொலைவுக்கு எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டப் பணிகளைத் தொடங்கியது. அப்பொழுது ஏற்பட்ட விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு முதல்வரின் வேளான் மண்டல அறிவிப்பு விவசாயிகளை பெரும் மகிழ்ச்சியடையச் செய்தது. வேளான் மண்டல அறிவிப்பு வந்து ஏழு மாதங்களே ஆன நிலையில், கெயில் நிறுவனம் மீண்டும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியை துவங்கியது விவசாயிகளின் மத்தியில் பெரும் அச்சத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது வெறும் அறிவிப்பு தானா..? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.