தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். முதல்வருடைய கருத்துக்கு ஆதரவாக எதிர்க்கட்சியான திமுக தலைவர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட காமெடி நடிகர் எஸ். வி. சேகர், முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியும், தேசியக்கொடியை அவமதிப்பது போன்ற கருத்துகளை பேசியும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் தேசிய கொடியை அவமதித்து, தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில், தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்ற பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கிலிருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா காணொலி காட்சி மூலம் இன்று விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என எஸ்.வி.சேகர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். நடந்த சம்பவத்துக்கு நீதிமன்றத்தின் முன் மனுதாரர் மன்னிப்பு கோரினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதி செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் மனுதாரர் மன்னிப்பு தொடர்பான மனு தாக்கலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். காவல்துறை சார்பாகவும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை கைது செய்ய மாட்டோம் என வாய்மொழி உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.