டெல்லியிருந்து தனி விமானம் மூலமாக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 11 மணி அளவில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி தமிழகத்திற்காக அர்ப்பணித்த மற்றும் அடிக்கல் நாட்டிய திட்டங்கள் குறித்த முழு விபரங்கள் இதோ…
- அர்ஜூன் மாக் 1ஏ டாங்கியை இந்திய ராணுவத்திற்கு சமர்ப்பித்தார். CVRDE, DRDO, 15 கல்வி நிறுவனங்கள், 8 லேப்கள் மற்றும் பல சிறு குறு தொழில் நிறுவனங்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டவை.
- 3 ஆயிரத்து 770 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கத் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட 9 கிலோ மீட்டர் நீளமுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார்.
- சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையே 22.1 கிமீ தொலைவிற்கு ரூ.293.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்துவைத்தார்.
- 423 கோடி ரூபாய் மதிப்பில் மின்வழித் தடமாக மாற்றப்பட்ட விழுப்புரம் – கடலூர், மயிலாடுதுறை – தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை – திருவாரூர் இடையிலான ஒற்றை வழி ரயில் பாதையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த திட்டம் டெல்டா மாவட்ட பாசனத்திற்கு உதவும். ரூ.2,640 கோடி மதிப்பில் இந்த திட்டம் 2.27 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர்ப்பாசனத்தை ஏற்படுத்தும்.
- சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி வளாகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.