தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மிதமான மற்றும் கன மழை பெய்துவருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மாலை நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மற்றும் கனமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
வட கடலோர பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்யக்கூடும் என்றும், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.