ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிபேட்டை சோளிங்கரில் 23 செ.மீ.மழையும், குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டம் மேலாலத்தூரில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக கூடும், வரும் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 1ம் தேதி 3ம் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது தான் வங்க கடலில் உருவான நிவர் புயல் வலுவிழந்து கரையைக் கடந்த நிலையில், புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.