ஜூலை 30, வியாழக்கிழமை ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விமானப்படை தளத்தில் இருந்து ULA Atlas V541 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருக்கும் இறுதிக் கட்ட பணிகள் நடந்துக் கொண்டிருப்பதாக நாசாவின் மார்ஸ் 2020 மிஷன் மேலாளர் ஜான் கால்வெர்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இதன் பெருமையையும் சாதனையையும் விவரிப்பது மிகக் கடினம், அது உற்சாகம் மற்றும் பதட்டத்துடன் கலந்துள்ளது, எங்கள் குழு பல தடைகளையும், சவால்களையும், குறிப்பாக உலகளாவிய பெருந் தொற்று காலத்தையும் வெற்றிகரமாக சமாளித்து செயல்பட்டுள்ளது. அது தான் இந்த இறுதிக் கட்ட பயணப் பணிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது என்று கூறினார்.
எதிர்பார்த்திராத இந்த பெருந்தொற்று கொரோனா தொற்றை நாசாவும் அதன் குழுக்களும் வெற்றிகரமாக சமாளித்துள்ளனர். இது எங்களுடைய டி.என்.ஏவில் உள்ளது. கடின உழைப்பும், விடா முயற்சியும் தான் எங்களுக்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை எளிதாக கிடைக்கச் செய்துள்ளது.
மிஷனின் இறுதிக் கட்ட பணிகள் நிறைவடைந்து விண்ணில் ஏவப்படும் நிகழ்வு வரும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நாசா தொலைக்காட்சி மற்றும் நாசாவின் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.
Perseverance Rover சிகப்பு கோளான செவ்வாயை 2021 பிப்ரவரி 18 அன்று ஏழு மாதங்களில் சென்றடையும். Curiosity Rover-ஐ ஒத்த பரிமாணங்களைக் கொண்ட Perseverance Rover ஏழு வெவ்வேறு அறிவியல் கருவிகளை எடுத்துச் செல்கிறது.
நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள கடந்த கால நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகளைத் தேடும் பணியை மேற்கொள்ளும், மற்றும் செவ்வாயின் தட்ப வெப்ப நிலையையும், நில பண்பியலையும் ஆராய்ந்து மாதிரிகளை திரட்டிய பின் பூமிக்கு திரும்பும். இம்மாதிரிகள் செவ்வாயில் மனிதர்கள் குறித்த ஆய்வுக்கு வழி வகுக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.