மலேசியா சுதந்திரம் அடைந்த 1957ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த வந்த UMNO(United Malays National Organisation) கட்சி, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நடத்திய மிகப் பெரும் ஊழலால் 2018 ஆண்டு தேர்தலில் ஆட்சியை இழந்தது.
2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மலேசிய நாட்டின் பிரதமராக நஜிப் சுமார் 10 ஆண்டுகாலம் பதவியில் இருந்தவர். இவர் மீது நம்பிக்கை மோசடி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. 1 எம்டிபி (1Malaysia Development Berhad) எனப்படும் மலேசிய மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 42 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான தொகையை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்பதே நஜிப் துன் ரசாக் மீதான அடிப்படைக் குற்றச்சாட்டு. மலேசிய வரலாற்றில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முதலாவது பிரதமர் இவர்தான்.
நஜிப் மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடி, பணமோசடி, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வால் ஸ்டிரீட் ஜெர்னல் பத்திரிகை மூலம் வெளியான இம்மாபெரும் ஊழல் விவகாரம் மலேசிய அரசியலில் பூதாகரமாக வெடித்தது. UMNO வின் மூத்த தலைவரும், முன்னள் பிரதமருமான மகாதீர் முஹம்மத் நஜிபின் ஊழல் ஆட்சிக்கு எதிராக கட்சி துவங்கினார். எதிர்கட்சிகளை ஒன்றினைத்து கடந்த வெற்றிப் பெற்று மலேசியாவின் பிரதமராக மகாதீர் மொஹம்மத் பொறுப்பேற்றதும் 1எம்டிபி முறைகேடு தொடர்பான வழக்குகள் உடனுக்குடன் பதியப்பட்டு விசாரணையும் நடந்து வந்தது.
இன்று தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்கு தவிர, 1எம்டிபி தொடர்பான மேலும் ஐந்து ஊழல் வழக்குகளையும் நஜிப் எதிர்நோக்கியுள்ளார். அதில் முதல் வழக்கான 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சியின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு விசாரணையில் குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டு முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு சிறைத் தண்டனை வழங்கி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.