கடந்த இரு ஆண்டுகளாக அதாவது 2018 முதல் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது விவோ(vivo) நிறுவனம். இந்தியா- சீனா ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு எதிரான மனநிலை உருவானது. இந்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சீனா செயலிகளை தடை செய்தது.
சீனாவுடனான வர்த்தகத்திற்கு புதிதாக பல கட்டுப்பாடுகளை விதித்தது. விவோ (vivo) ஒரு சீன நிறுவனம் என்பதால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதன் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. வேறொரு புதிய டைட்டில் ஸ்பான்சரை தேடியது. இதற்கான ஏலத்தில் பல நிறுவனங்கள் கலந்து கொண்டன. இறுதியில் அதிக ஏலத்தொகை குறிப்பிட்டிருந்த ட்ரீம் லெவன் (Dream 11) என்ற நிறுவனம் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை பெற்றுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் அதீத வளர்ச்சியை பெற்று வரும் இணையதள விளையாட்டு நிறுவனம் ஆகும்.
டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 218 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது பிசிசிஐ. காரணம் டைட்டில் ஸ்பான்சராக விவோ(vivo) செலுத்திய தொகை 439.80 கோடி. ஆனால் ட்ரீம் லெவன் ஏலத்தில் கோரி இருந்த தொகையோ வெறும் 222 கோடி. Dream11 நிறுவனமும் சீன தொடர்புடையது என கூறப்படும் குற்றச்சாட்டை பிசிசிஐ மறுத்துள்ளது. எது எப்படியோ விவோ வை கழட்டி விட்டதால் பிசிசிஐக்கு மிகப்பெரிய நஷ்டம் என்பது மட்டும் உண்மை.