2004ம் ஆண்டு வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான தோனியின் பயணம் கிரிக்கெட் உலகில் சாதாரணமானது அல்ல. 2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். மிஸ்டர் கூல் என அனைவரும் சொல்லும் அளவிற்கு சிறப்பான தலைமைப் பண்புடன் அணியை எடுத்துச் சென்றார். இதுவரை தோனி இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள் போட்டிகள் மற்றும் 98 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தோனி தலைமையில் செயல்பட ஆரம்பித்த பின் இந்திய அணி வெற்றிகளை வாரிக்குவிக்க ஆரம்பித்தது. அவருடைய தனித்துவமான பேட்டிங் ஸ்டைல் மற்ற நாட்டு பவுலர்களை திக்குமுக்காட வைத்தது. அதுவும் தோனியின் ஸ்பெஷல் ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு என தனியொரு ரசிகர்கள் பட்டாளமே காத்துக்கிடக்கும்.
இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 33 அரை சதம், 6 சதம் உட்பட 4 ஆயிரத்து 876 ரன்களை குவித்துள்ளார். 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே 224 ரன்களை குவித்தார். 350 ஒருநாள் கிரிக்கெட் போட்டில்களில் பங்கேற்றுள்ள தல தோனி இதுவரை 10 ஆயிரத்து 773 ரன்களை குவித்துள்ளார். விக்கெட் கீப்பராகவும், 321 கேட்சுகள், 123 ஸ்டெம்பிங்ஸ் என உலக தரத்துக்கு பெயர் பெற்றவர்.
T20 போட்டிகளின் அதிரடி நாயகனாக வலம் வந்த தோனி, இதுவரை 98 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 617 ரன்களை குவித்துள்ளார். 2008 மற்றும் 2009ம் என அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளிலும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது தோனிக்கு வழங்கப்பட்டது. இரண்டு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்ற ஒரே வீரர் தோனி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 முறை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள தோனி, அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.
இந்திய அணிக்கு 50 ஓவர், 20 ஓவர், சாம்பியன் டிராபி என மூன்று விதமான உலகக்கோப்பைகளையும் பெற்றுத்தந்த ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி மட்டுமே. இப்படி பல்வேறு புகழுக்கும், இந்திய அணியின் பல சாதனைகளுக்கும் சொந்தக்காரரான தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.