புதிய கல்விக் கொள்கைக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசும் தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. இந்த மும்மொழிக் கொள்கை தேசிய அளவில் விவாதப் பொருள் ஆகவேண்டிய சூழலை திமுக எம்.பி. கனிமொழியின் ஒரு ட்வீட் உருவாக்கி இருக்கிறது. நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் பணியிலிருந்த CISF பெண் காவலர் ஒருவர், திமுக எம்.பி. கனிமொழியிடம் இந்தியில் ஏதோ கேட்க, அதற்கு கனிமொழி எம்.பி. , “தனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேளுங்கள்” என்று கூறியதற்கு, அந்தப் பெண் காவலர் “இந்தி தெரியாது என்றால், நீங்கள் இந்தியர் தானா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி தெரிந்தால் மட்டும்தான் இந்தியரா, இந்தி பேசுபவர் தான் இந்தியர் என்ற நிலை எப்பொழுது இருந்து உள்ளது?” என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார். தேசிய அளவில் பிரபலமான பெண் எம்.பி. ஒருவருக்கே இந்த நிலை என்றால் இந்தி தெரியாத சாமானிய மக்கள் நிலை என்ன என்ற கேள்வி தமிழகத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
Today at the airport a CISF officer asked me if “I am an Indian” when I asked her to speak to me in tamil or English as I did not know Hindi. I would like to know from when being indian is equal to knowing Hindi.#hindiimposition
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 9, 2020
தமிழகத்தில் பற்றிய தீ இப்பொழுது இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியிருக்கிறது. கனிமொழியின் கருத்துக்கு ஆதரவாக கன்னடர்கள், வங்காளிகள், பஞ்சாபிகள், மராத்தியர்கள் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தியை தாய்மொழியாக கொண்ட பலரும் கூட கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். பல திட்டங்களில் இந்தியாவுக்கு முன்னோடியாக இருக்கும் தமிழகம் புதிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வருவதிலும் முன்னோடியாக வலம் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.