கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாருக்கு கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாகவே கவலைக்கிடமான நிலையில் இருந்த அவருடைய உடல் நிலை நேற்று மிகவும் மோசமானது. சரியாக மாலை 6.56 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொழிலதிபரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் மறைவு செய்தியைக் கேள்விப்பட்டு பிரதமர், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பிற கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். வசந்த் அண்ட் கோ என்ற சாம்ராஜ்யம் மூலமாக பலருக்கு வாழ்வாதாரம் கொடுத்து, தனது இன்முக பேச்சால் மக்கள் மனதை கவர்ந்த எச்.வசந்தகுமாரின் உடல் இன்று காலை அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு வந்த வசந்த் அண்ட் கோ ஊழியர்கள், கட்சி தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் காமராஜர் அரங்கில் வைக்கபட்ட அவரது உடலுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மறைந்த வசந்த குமாரின் உடல், சென்னையிலிருந்து அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.