கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நீட்டிப்பு தொடர்ந்து அமல்படுத்துப்பட்டு வருகிறது. இதனால் ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பிற்காக திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இன்று வரை பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் தங்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கபடுகிறது. கடந்த வாரம் மாணவர்களின் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதியளித்ததையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கி இருக்கிறது. சேர்க்கையின் போது கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தன குளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, “அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாற்று சான்றிதழ் பெற எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. பள்ளிகளும் எந்த காரணங்களுக்காகவும் மாணவர்களிடம் பணம் கேட்க கூடாது.
மீறி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரித்துள்ளார். அரசு பள்ளிகளில் இதுவரை ஐம்பதாயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். கொரோனா பரவல் குறைந்தவுடன் இந்தாண்டு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும். மேலும் காலத்தின் தேவைக்கேற்ப பள்ளிப் பாடங்களை குறைப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்” என தெரிவித்தார்.