மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். திடீரென அவர் பதவி விலக, இபிஎஸ் முதலமைச்சராக சிம்மாசனம் ஏறினார். இதற்கு எல்லாம் சின்னம்மா சசிகலா தான் காரணம் எனக்கூறப்பட்டது. அதன் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்ததும், ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தியதும் அனைவரும் அறிந்த கதையே. தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.
தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் அதிமுக சார்பில் யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், எடப்பாடியார் என்றும் முதல்வர் எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021ம் நமதே! என பதிவிட்டது அதிமுகவில் பதற்றத்தை உருவாக்கியது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தை கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். செயற் குழு, பொதுக்குழு ஆகியோர் எல்லாம் கூடி உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம் என்றும் தெரிவித்தார். அப்போது யாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பிரசாரத்தை ஈடுபடுவீர்கள் என்ற கேள்வி, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்வோம் என பதிலளித்தார்.