தென் மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தொடர்ந்து கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மழைப்பொழிவின் தீவிரம் அதிகரித்து வருவதால் எர்ணாகுளம் மாவட்டத்தின் நேரியமங்கலம் பகுதியில் யானையின் சடலம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.
மேலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழையினால் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காணவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், கேரளாவில் பதற்றம் நிலவுகிறது.
கிட்டத்தட்ட 80 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுவரை 5 பேர் சடலமாகவும், 10 பேர் உயிருடனும் மீட்கப்பட்டதாக இடுக்கி மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், காவலர்களும், தீயணைப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.